திறக்காத மதுபான பாருக்கு வசூலித்த உரிமம் கட்டணத்தை திருப்பிக்கேட்ட மனு - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


திறக்காத மதுபான பாருக்கு வசூலித்த உரிமம் கட்டணத்தை திருப்பிக்கேட்ட மனு - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

திறக்காத மதுபான பாருக்கு வசூலித்த உரிமம் கட்டணத்தை திருப்பிக்கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பையர் ஓட்டல் நிர்வாகம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டது.

இதன்படி எங்கள் ஓட்டலும், ஓட்டலில் உள்ள மதுபான கூடமும் (பாரும்) மூடப்பட்டது. அதன் பின்னர், ஓட்டல் மறுசீரமைக்கும் பணி தொடங்கி இன்னமும் நடந்து வருகிறது. ஆனால், 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுக்களுக்கான மதுபான விற்பனை உரிமம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணமாக ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்து 750-ஐ எங்களிடம் இருந்து கலால்துறை வசூலித்து விட்டது. இந்த தொகையை திருப்பிக்கேட்டு 9 முறை மனு கொடுத்தும், எந்த பதிலும் இல்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கையை 6 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று கலால்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story