வடுகர்பேட்டை கிராமத்தை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
வடுகர்பேட்டை கிராமத்தை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வடுகர்பேட்டை கிராமத்தை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மக்கள்குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.
திருச்சி மாவட்ட த.மு.மு.க. தலைவர்கள் பைஸ் அகமது, முகமது ராஜா ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள `தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமிய வாழ்வியலுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. எனவே `தி கேரளா ஸ்டோரி' மற்றும் அடுத்து வர உள்ள `பர்ஹானா' என்கின்ற திரைப்படத்தையும் திருச்சி மாவட்ட திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க கூடாது என கூறி உள்ளனர்.
நோய் பரவும் அபாயம்
திருச்சி உறையூர் புதுப்பாய்க்காரத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் சிலர் சாக்கடை செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தனி ஊராட்சியாக...
லால்குடி வடுகர்பேட்டை கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி குறைகளை நிவர்த்தி செய்ய கோவண்டாகுறிச்சி ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 8 கிலோ மீட்டர் காட்டுப் பயணம் சென்று விவசாய நிலங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டும் வருகிறது. எனவே எங்கள் கிராமத்தை ஆய்வு செய்து தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
616 மனுக்கள்
கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 616 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
நீர் மோர்
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் நீர் மோர் வழங்கப்பட்டது. இது கோடை காலம் முடியும் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள், மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, உதவி ஆணையர் (கலால்) ரெங்கசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) வேலுமணி, பழங்குடியினர் நல அலுவலர் கீதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.