விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு
தரங்கம்பாடி பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அதிகாரி முருகதாசிடம் திருக்கடையூர், மாத்தூர், அன்னவாசல், நல்லத்துக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோபிகணேசன் தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் ஊராட்சியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க வேண்டும். பன்றிகளால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதுபோல சங்கரன்பந்தல், இலுப்பூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நெற்பயிர்களை மேய்ந்து நாசம் செய்யும் 50-க்கும் மேற்பட்ட குதிரைகளையும் பிடித்து நெற்பயிர்களை பாதுகாப்பதோடு அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகை மற்றும் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்.
வடிகால் வாய்க்கால்
மாத்தூர், திருக்கடையூர் ஆகிய ஊராட்சிக்கு இடையே செல்லும் மஞ்சள் ஆற்றில் இருந்து பிரியும் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கிராம முக்கிய பிரமுகர்கள் திருக்கடையூர் ராமமூர்த்தி, மாத்தூர் முனுசாமி, அன்னவாசல் அருண்குமார், நல்லத்துக்குடி வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.