பொது வழி பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
பொது வழி பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பொது வழி பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஆரணி டவுன் பெரியார் நகர் மணியம்மை வீதியில் வசிக்கும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக மணியம்மை வீதியில் வசித்து வருகிறோம். தரை வரி, வீட்டு வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகிய அடையாள அட்டைகளும் உள்ளன.
இந்த நிலையில் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த சிலர் திடீரென இந்த இடம் எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து நாங்கள் செல்லும் பாதையின் குறுக்கே 6 அடி சுவர் எழுப்பவிட்டனர். இந்த இடம் தொடர்பான வழக்கு 40 வருடமாக சென்னை ஐகோர்ட்டில் இருந்தது. கடந்த ஜூலை மாதம் வந்த தீர்ப்பில் இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாதையின் குறுக்கே சுவர் எழுப்பியதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், அத்தியாவசியமான பொருட்கள் வாங்கவும் மற்றும் மருத்துவமனைக்கு செல்லவும் வழியின்றி தவித்து வருகின்றோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து இடையூறு இன்றி அனைவரும் சென்று வர பொதுவழிப்பாதை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.