மாநகராட்சி ஆணையரிடம் வயலூர் பகுதி வியாபாரிகள் மனு
திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வயலூர் பகுதி வியாபாரிகள் மனுஅளித்தனர்
திருச்சி வயலூர்சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முருகேசன், செயலாளர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "எங்கள் பகுதி வியாபாரிகள் அனைவரும் கடைவாடகை, தொழில்வரி, பாதாளசாக்கடை வரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை முறைப்படி செலுத்தி கடை நடத்தி வருகிறோம். கொரோனா தாக்கத்தால் வியாபாரம் குறைந்து வரிகளை கட்டமுடியாமல் தவித்து வருகிறோம். ஆனால் கொரோனா வந்தபிறகு எங்கள் கடைகளுக்கு அருகிலேயே ஏராளமான தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகரித்து விட்டன. மேலும், உய்யகொண்டான்திருமலை வாய்க்கால்பாலம் அருகே புதிதாக கலைஞர் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளாகிய நாங்கள் பெரும் இழப்பையும், மனஉளைச்சலையும் சந்தித்து வருகிறோம். இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறது. ஆகவே விரைவில் வாரச்சந்தையையும், சாலையோர கடைகளையும் அகற்றி எங்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.