வீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் மனு


வீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
x

வீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்

பட்டா வழங்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

வேப்பந்தட்டை தாலுகா, பெரிய வடகரையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 2010-ம் ஆண்டு எங்கள் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாவிலங்கை செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலம் சார்பில் வீடு கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே அந்த இடம் அமைந்துள்ள பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பால்குடம் எடுக்க அனுமதி

குன்னம் தாலுகா, காருகுடி கிராமத்தை சேர்ந்த பெண்களும், இந்து முன்னணியினரும் சேர்ந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வை வருகிற 14-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஆனால் மங்களமேடு போலீசார் பால்குட ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே பால்குடம் எடுக்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் காவியமூர்த்தி முன்னிலையில், அக்கட்சியினர், சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் கந்துவட்டி கும்பலையும், கட்ட பஞ்சாயத்தையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை குறி வைக்கும் தனியார் நிதி நிறுவனங்களை கண்டித்தும், நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் அருந்ததியர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

265 மனுக்கள்

கூட்டத்தில் மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களில் பண்ணை சாரா தொழில் புரியும் தொழில் முனைவோர்களை மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக ஆலத்தூர் தாலுகாவில் 12 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தொழில் வளர்ச்சிக்கான காசோலைகளை வழங்கினார்.


Related Tags :
Next Story