விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம்:உயர்மட்ட அதிகாரி விசாரணையைநெல்லையில் நடத்த வேண்டும்-மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம்:உயர்மட்ட அதிகாரி விசாரணையைநெல்லையில் நடத்த வேண்டும்-மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரி விசாரணையை நெல்லையில் நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரி விசாரணையை நெல்லையில் நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரி விசாரணை வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்த நெல்லை மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையை தமிழ் தேச தன்னுரிமை கட்சி வரவேற்கிறது. இதையொட்டி நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை வரவேற்கும் நேரத்தில், அவரது விசாரணை அலுவலகத்தை நெல்லையில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறி உள்ளார்.

இலவச பாஸ்

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மனித உரிமை காக்கும் கட்சி அமைப்பாளர் துர்க்கை லிங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், 'நாங்குநேரி சுங்கச்சாவடியை சுற்றி அமைந்திருக்கும் 20 கிலோமீட்டர் சுற்றளவு கிராம மக்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும். மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகளையும் சீரமைக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

நெல்லை சங்கர் நகர் கணேஷ் நகரை சேர்ந்த அயூப்கான் கொடுத்த மனுவில், 'எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு சங்கர் நகர் பேரூராட்சியில் விண்ணப்பித்தேன். அதிகாரிகள் சொன்னபடி ரூ.9,355-க்கு வங்கி வரைவோலை எடுத்து கட்டணம் செலுத்தினேன். அதன்பிறகும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் இணைப்பு கொடுக்காமலேயே, மாதாந்திர தண்ணீர் கட்டணமும் செலுத்தும்படி கூறியதால் ரூ.150 செலுத்தி உள்ளேன்.

தற்போது மேலும் ரூ.10 ஆயிரம் கேட்கிறார்கள். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி உள்ளார்.

சுடுகாடு கொட்டகை

நெல்லை டவுன் மேலகுன்னத்தூர் ஞானம்மாள் கட்டளை பகுதி மக்கள், முருகன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அதில் 'வன்னியர் சமுதாயத்தினருக்கு தனியாக சுடுகாடு கொட்டகை அமைத்து தர வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story