டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் முன்னாள் எம்.பி. ராமசுப்பு மனு கொடுத்துள்ளார்.
ஆலங்குளம்:
நெல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு நெல்லை, தென்காசி மாவட்ட கலெக்டர்களுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் டெங்கு என்று கூறப்படும் விஷக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடுகின்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. ஒருவகை கொசுக்களால் இந்த காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறம், நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், மருந்து மாத்திரைகள் கிடைக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்த தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்களை மாவட்டத்தில் தேவையாள அளவிற்கு நியமித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்களை பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.