ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு


ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு
x

நெல்லை கொக்கிரகுளத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

நெல்லை டவுன் 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் தலைமையில் அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், "28-வது வார்டு சுந்தரர் தெருவில் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அந்த வார்டில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. எனவே நல்ல குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். சாலை சீரமைப்பு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

31-வது வார்டு கவுன்சிலர் அமுதா தலைமையில் அந்த பகுதி மக்கள் கொடுத்த மனுவில், "நெல்லை கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை உடனே சீரமைக்க வேண்டும். அந்த பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் தலைமையில் அந்த பகுதி மக்கள் கொடுத்த மனுவில், "பாளையங்கோட்டை காவிரிநகர் சிறுவர் பூங்கா சேதமடைந்து காணப்படுகிறது. இதேபோல் முபாரக்நகர் விளையாட்டு பூங்காவும் சேதம் அடைந்துள்ளது. இவற்றை சரிசெய்ய வேண்டும். பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வெளிப்புறங்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்திட வேண்டும். கோரிப்பள்ளம் பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். 55-வது வார்டு பாலாஜி கார்டன் குடியிருப்பு பகுதி மக்கள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி கேட்டு கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்தனர்.Next Story