முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு
கல்லலில் போலி மதுக்கடை இயங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
சிவகங்கை முன்னாள் நகர் மன்றத்தலைவரும், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, பொதுச் செயலாளருமான அர்ச்சுனன், தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி மதுபானக் கடை பல நாட்களாக செயல்பட்டு வந்துள்ளது.உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியாமல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் ஒரு கடை எவ்வாறு இவ்வளவு நாட்கள் செயல்பட முடிந்தது. டாஸ்மாக் நிர்வாகம் எவ்வித புகாரும் செய்யவில்லை.
டாஸ்மாக் நிர்வாகத்தில் எத்தனை கண்காணிப்பு அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள், மண்டல மேலாளர் அலுவலக கண்காணிப்பு குழுக்கள் இருந்தும் ஏன் போலி மதுபானக் கடையை கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இதை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.