வேலைக்கு அழைத்துச் சென்று வெளிநாட்டில் சித்ரவதை: தாயை மீட்கக்கோரி இளம்பெண் கலெக்டரிடம் மனு
குவைத் நாட்டில் வேலைக்கு அழைத்துச் சென்று எனது தாயார் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவரை மீட்க வேண்டும் என இளம்பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.
நாகர்கோவில்,
குவைத் நாட்டில் வேலைக்கு அழைத்துச் சென்று எனது தாயார் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவரை மீட்க வேண்டும் என இளம்பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.
இளம்பெண் மனு
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ஷீலா தேவி. இவர் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எனது தாயார் சுமதியை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் வீட்டு வேலை உள்ளதாக தெரிவித்தார். இதற்காக அந்த பெண் திருச்சியில் உள்ள ஒரு நபரை எனது தாயாருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் மூலம் எனது தாயார் சுமதி குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தாயாரை மீட்க நடவடிக்கை
முதலில் ஒரு வீட்டில் 5 மாதம் எனது தாயார் வேலை பார்த்தார். அதன்பின் அவர்கள் சொன்னபடி வேலை கொடுக்காமல் வேறு, வேறு இடங்களுக்கு மாற்றி, அடித்து சித்ரவதை செய்வதாக எனது தாயார் செல்போன் மூலம் என்னிடம் கூறி அழுதார். இது தொடர்பாக திருச்சியில் உள்ள அந்த நபரிடம் கேட்டபோது, அந்த நபர் மிரட்டல் விடுக்கிறார்.
இந்தநிலையில் தற்போது எனது தாயார் சுமதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது கதி என்னவென்று தெரியாமல் நானும் எனது உறவினர்களும் அச்சத்தில் உள்ளோம். எனவே எனது தாயார் சுமதியை குவைத் நாட்டில் இருந்து மீட்டு நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.