விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு


விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக்கோரி திருப்பத்தூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக்கோரி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்காக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வி.ஆர்.செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் ஜிப்பில் அழைத்து வரப்பட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் சென்னையில் கடந்த 6-ந் தேதி அரசு கட்டுபாட்டில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செய்ய கோர்ட்டு அனுமதி பெற வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை, வழக்கறிஞர்கள் சீருடையில் சிலர் தாக்க முயன்றனர். பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டிய கோர்ட்டு வளாகங்களில் வழக்கறிஞர் போர்வையில் ஊடுருவி அர்ஜூன் சம்பத்தை கொல்ல திட்டமிட்டது அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழர்களின் நம்பிக்கை, கலாசாரத்தை கொச்சையாக பேசி வருவதும், திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று போலி அரசியல் பிரசாரங்கள் செய்து வருவதும், அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செய்ய வரும் பா.ஜ.க., இந்து மக்கள் கட்சி, இந்து இயக்க தொண்டர்கள் மீது கல், செருப்பு வீசி தாக்குதல் நடத்தும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியரசு, போன்றோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

மாவட்டத் தலைவர் கே.கே.ரமேஷ், மாநில செயலாளர் எம்.பி. ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் ரவி, மாநில செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story