கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு
கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அம்பேத்கர்- பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட துணை தலைவர் இரா.ராமச்சந்திரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கி.வீரபெருமாள், ஜெய் பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ஆ.செண்பகராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சூ.பீமாராவ் மற்றும் நிர்வாகிகள் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கோவில்பட்டி நகராட்சி முத்துராமலிங்க தேவர் நினைவு தினசரி சந்தையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இங்கு குறிப்பிட்ட சில வியாபாரிகள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளை பொது ஏலம் என்ற முறையில் தன்வயப்படுத்தி உள்ளனர். இது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்ட சரத்துகளுக்கும் எதிரானது ஆகும். எனவே பொது ஏல முறையை ரத்து செய்துவிட்டு, சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காக இட ஒதுக்கீட்டு முறையில் குலுக்கல் நடத்தி கடைகளை ஒதுக்கீடு செய்தால் அனைத்து வகுப்பினருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் சந்தையில் புதிதாக கட்டப்பட உள்ள கடைகள் முழுவதையும் பொது ஏல முறையை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி குலுக்கல் நடத்தி கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.