100 நாள் வேலை வழங்கக்கோரி திருமுக்கூடலூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரி திருமுக்கூடலூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வழங்கினார். இக்கூட்டத்தில் 275 மனுக்கள் பெறப்பட்டன.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 60 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் ஒருவருக்கு ரூ.7 ஆயிரத்து 650 மதிப்புள்ள மூன்று சக்கரவண்டி, 4 பேருக்கு 27 ஆயிரத்து 360 மதிப்புள்ள தையல் எந்திரம், முதுகு தண்டுவடம் பாதித்த 2 பேருக்கு தலா ரூ.99 ஆயிரத்து 777 மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
100 நாள் வேலை
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம், சோமூர் ஊராட்சி, திருமுக்கூடலூர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- திருமுக்கூடலூரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் 100 நாள் வேலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சோமூர் ஊராட்சிக்கு கட்டுப்பட்டது எங்கள் ஊர். எங்கள் பொதுமக்களுக்கு 4 வாரம், 5 வாரத்திற்கு ஒருமுறை தான் 10 பேர், 15 பேருக்கு மட்டும் 100 நாள் வேலை கொடுக்கிறார்கள். எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து திருமுக்கூடலூர் பொதுமக்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை கொடுக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அடிப்படை வசதி
கரூர் காந்திகிராமம், சணப்பிரட்டி, தமிழ்நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நகர் சணப்பிரட்டி அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த 8 மாதங்களாக மொத்தம் 55 குடியிருப்புகளில் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புகளுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. சாக்கடை வெளியேற வசதி செய்து கொடுக்கப்படவில்லை.நல்ல தண்ணீர் வசதி இல்லை. குடியிருப்பை சுற்றிலும் கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகமாகி மலேரியா, டெங்கு, காய்ச்சலால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மணல் குவாரி திறக்க அனுமதிக்க கூடாது
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம் கிராமம்) புதிய மணல் குவாரியை திறக்க அனுமதிக்க கூடாது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் கிராமத்தில் புதிய மணல் குவாரியை திறக்க அனுமதிக்க கூடாது.மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை தொடர்பாக காவிரி ஆணையம் சட்டவிரோதமாக விவாதித்தால் தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.