குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு


குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு
x

குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்டு கட்சி மக்கள் விடுதலை, ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்பினர் சார்பில் நேற்று கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் 'வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்டதில் தனிப்படையினர் பட்டியலின மக்களை விசாரணைக்காக அழைத்து சென்று துன்புறுத்தி, அசுத்தம் செய்ததை ஒத்துக்கொள் என்று வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர். இல்லையென்றால் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டுகின்றனர்.

சாதாரண விசாரணை நடைபெறும் போது கேமராவில் பதிவு செய்வதும், மிரட்டும்போது கேமரா வைத்து எடுப்பதில்லை என்றும் விசாரணைக்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளியாக்கி வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனிப்படை போலீசார் செயல்பட்டு வருவதாக சந்தேகம் வருகிறது. எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறிய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story