மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x

வேடசந்தூர் அருகே மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள டி.அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் (வயது 65). அவருடைய மனைவி ஜெயா. இந்த தம்பதியின் 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஜோதிவேலும், ஜெயாவும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் இவர்கள் வேலை செய்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் ஜோதிவேலின் வீட்டின் முன்பு 'டமார்' என்ற சத்தம் கேட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிவேல், ஜெயா மற்றும் அக்கம்பக்கத்தினர் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஜோதிவேலின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஜோதிவேலுவுக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாா் விசாரித்து வருகின்றனர். மில்தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story