பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு: பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரிபொருள் விலையை குறைக்காமல் மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு ரூ.6-ஐ தாண்டிவிட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு ரூ.5-க்கும் கீழாக குறைந்துவிட்டது. சமையல் கியாஸ் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22 ஆயிரம் கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடுசெய்து விட்ட நிலையில், இப்போது கியாஸ் விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தை போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.