மாமூல் கொடுக்காததால் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
திருமுருகன்பூண்டியில் மாமூல் கொடுக்காததால் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பழைய பொருட்கள் விற்பனை கடை
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பெரியாயிபாளையம் ஸ்கூல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவர் திருமுருகன்பூண்டியில் பழைய பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகராஜ் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு கடையின் உள்புறம் தூங்க சென்று விட்டார். நேற்று காலை நாகராஜின் நண்பர்கள் அவருடைய கடைக்கு சென்றபோது கடையின் வெளிப்புறம் நாகராஜின் செருப்பு உள்பட சில பொருட்கள் எரிந்த நிலையில் கிடந்தன. அதன் அருகில் பீர்பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது.
இதையடுத்து நாகராஜை அவருடைய நண்பர்கள் தட்டி எழுப்பி நடந்த சம்பவத்தை கூறினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நேற்று முன் தினம் இரவு 11.50 மணிக்கு ஒரு மொபட்டில் வாலிபர் ஒருவர் வருவதும், அவர் வண்டியை கடையின் முன்பு நிறுத்தி விட்டு, அதில் இருந்து பெட்ரோல் நிரப்பிய ஒரு பீர் பாட்டிலை எடுத்து வருவதும் பதிவாகி உள்ளது.
கேமராவில் பதிவாகி இருந்தது
அதன் பின்பு அந்த வாலிபர் கடையின் உள்புறம் எட்டி பார்த்து விட்டு, கடை வாசலில் பாட்டிலை 2 முறை தூக்கி வீசுகிறார். 2 முறையும் அது தீ பற்றாததால் 3-வது முறை பாட்டிலை கீழே போட்டு உடைத்த அந்த வாலிபர், தீக்குச்சியால் அதை பற்ற வைத்தார். இதனால் அங்கு குபீரென தீப்பிடித்து எரிகிறது. இதையடுத்து அந்த வாலிபர் அதை தனது செல்போனில் படம் பிடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்வது பதிவாகி இருந்தது.
தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அந்த வாலிபர் திருமுருகன்பூண்டி நெசவாளர்காலனியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (29) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் சந்திரபோஸ் நாகராஜின் கடைக்கு சென்று மாமூல் கேட்டதும், அவர் கொடுக்க மறுத்ததால் நாகராஜை பயமுறுத்துவதற்காக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த