லாரி மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதல்; பெரும் விபத்து தவிர்ப்பு


லாரி மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதல்; பெரும் விபத்து தவிர்ப்பு
x

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோது தண்ணீர் லாரி மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

விபத்து

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா சின்னத்தம்பி. பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர். இவர் ஆத்தூரில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் லாரியில் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது மண்மங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு லாரி ஒன்று நின்றது.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்னால் மோதியது. இதில் தண்ணீர் லாரியின் பின்பக்கத்தில் இருந்த ஆயில் என்ஜின் கழன்று கீழே விழுந்தது. பெட்ரோல் டேங்கர் லாரியின் முன்பகுதி மிகுந்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் கீழே ஒழுக ஆரம்பித்தது. லாரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றதால் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கத்தொடங்கின.

போக்குவரத்து பாதிப்பு

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனே வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்ரோல் லாரியை கிரேன் எந்திரத்தின் உதவியுடன் தூக்கி சாலைேயாரம் நிறுத்தினர். பின்னர் அந்த லாரியை அருகாமையில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு புதைக்கப்பட்டு இருந்த டேங்கரில் பெட்ரோலை இறக்கினர்.

லாரி மோதிய விபத்தில் பெட்ரோல் ஒழுகும் போது திடீரென தீப்பற்றி இருந்தால் அந்தப்பகுதியே தீக்கிரையாகி இருக்கும். 2 லாரிகளும் எரிந்திருக்கும். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 லாரி டிரைவர்களும் உயிர் தப்பினார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story