அண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணி- விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை


அண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணி- விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
x

அண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

அந்தியூர்

அண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 ரோடு சந்திப்பு

அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியில் 3 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதன் வழியாக அப்பகுதியில் இருந்து அந்தியூர், பவானி, ஈரோடு, சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அம்மாபேட்டை, மேட்டூர் போன்ற ஊர்களுக்கு தினமும் இரவு, பகலாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

மேலும் சென்னையில் இருந்து ஊட்டி மற்றும் கேரளாவுக்கும் காய்கறிகள் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் இரவு நேர ஆம்னி பஸ்கள் சென்று வரக்கூடிய முக்கிய சந்திப்பாக அண்ணாமடுவு 3 ரோடு சந்திப்பு உள்ளது.

தரைப்பால பணி

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரோடாக அண்ணாமடுவு 3 ரோடு காணப்படுகிறது. ஆனால் மழை காலங்களில் பெரிய ஏரி நிரம்பும்போது அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த 3 ரோட்டில் ஆறு போல் ஓடி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அண்ணாமடுவு 3 ரோடு சந்திப்பில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விபத்துகளால் அவதி

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'தரைப்பாலம் அமைப்பதற்காக 3 ரோட்டில் ஆங்காங்கே குறுக்கே தடுப்பு கான்கிரீட் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் தடுப்பு கான்கிரீட் கற்கள் மோதி கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.

மேலும் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா மடுவு பகுதி வரை உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. இது எங்களை மேலும் சிரமப்படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். உடனே அண்ணாமடுவு 3 ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிந்து பொதுமக்கள் பயன்பெற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story