அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4½ லட்சம் மோசடி; தம்பதி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4½ லட்சம் மோசடி; தம்பதி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் 7-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
முதுகலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து, சோலார் பேனல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணத்துக்கு பெண் பார்க்க ஈரோட்டில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்துக்கு சென்றேன். அதன் உரிமையாளர்களான ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதி எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுக்கு அரசு உயர் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், பணத்தை கொடுத்தால் அரசு வேலை வாங்கி விடலாம் என்றும் கூறினர். அவர்களை நம்பி 2 தவணையாக கடந்த 2019-ம் ஆண்டு மொத்தம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. அவர்களிடம் பணத்தை கேட்டாலும் திருப்பி கொடுக்க மறுக்கிறார்கள். எனவே என்னிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
இதேபோல் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பட்டதாரியான பூவழகன் (37) என்பவர் கொடுத்த மனுவில், "நான் சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறேன். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோட்டை சேர்ந்த தம்பதி ரூ.2½ லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டனர். அவா்களிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்", என்று கூறி இருந்தார்.