3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுனர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மருந்தாளுனர்கள் 3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மருந்தாளுனர்கள் 3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
கோரிக்கைகள்
பல ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருந்தாளுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருந்து கிடங்குகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மருந்தாளுனர்களை சிறப்பு தேர்வு மூலம் நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும்.
1996-ம் ஆண்டுக்குப்பின் பணிபுரிந்து வரும் மருந்தாளுனர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளை அணிந்து பணியாற்றுவோம் என அறிவித்தனர்.
3-வது நாளாக...
அதன்படி மயிலாடுதுறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மருந்தாளுனர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருந்தாளுனர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு தங்களுடைய கோரிக்கைகள் வெளிப்படுத்தும் விதமாக நேற்று 3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.