தர்மபுரியில் சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி


தர்மபுரியில் சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி
x

தர்மபுரியில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் சுதந்திர போராட்ட வரலாறு விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தர்மபுரி:

சுதந்திர போராட்ட வரலாறு

மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் சுதந்திர போராட்ட வரலாறு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்பட கண்காட்சி மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சேவை முகாம் தர்மபுரி செந்தில் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியையொட்டி சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

இந்திய சுதந்திர போராட்டத்தில் வேலூர் சிப்பாய்க் கலகம் முக்கியவத்துவம் வாய்ந்த முதல் கலகம் ஆகும். தமிழகத்தில் கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் இந்திய விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்கள். இந்திய விடுதலைக்காக எந்தவித சுயநலமின்றி எண்ணற்ற தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். நாட்டின் விடுதலையும், வளர்ச்சியும் மட்டுமே அவர்களின் எண்ணத்தில் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்தும் கூட அந்த தலைவர்கள் நம் எண்ணத்தில் உள்ளனர். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

அரசின் திட்டங்கள்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுவை மாநில கள அலுவலக மண்டல இயக்குனர் காமராஜ் பேசுகையில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்த கண்காட்சி மற்றும் சேவை முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் என அனைத்து திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை கொண்டிருந்தால் தான் தகுதியான திட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் பயனடைய முடியும். தகவல் தொடர்பு உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகள் எதுவும் இல்லாத காலத்தில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் வரலாறாக பேசப்படும் ஆளுமைகளாக உயர்ந்திருக்கிறார்கள். இந்த கண்காட்சியை பார்வையிடும் மாணவ - மாணவிகள் இப்போதே தங்கள் வாழ்க்கைக்கான பாதையை தீர்மானித்து கொள்ளுங்கள். எண்ணங்கள் வலுப்பட்டால் வெற்றி வசப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கள விழிப்புணர்வு அலுவலர்கள் வித்யா, பிபின் நாத், பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வநாயகம், உதவியாளர் வீரமணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது.


Next Story