பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்
பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் கூறினார்.
பரங்கிப்பேட்டை:
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சிதம்பரம் அருகே பிச்சாவரத்துக்கு வருகை புரிந்தார். பின்னர் அவர் அங்குள்ள சுற்றுலா மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், படகு சவாரிக்கு எத்தனை படகுகள் உள்ளது? அவை சரியாக உள்ளதா? என்று கேட்டறிந்தார்.
அப்போது கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் படகு சவாரிக்கு கூடுதல் மோட்டார் படகுகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். தொடர்ந்து படகில் சென்று அங்குள்ள சுரபுன்னை காடுகளை பார்வையிட்டார்.
தங்கும்விடுதி
இதில் பிச்சாவரம் காட்டுப்பகுதியில் செயல்படாமல் இருக்கும் பயணிகள் தங்கும் விடுதியை பார்வையிட்டு அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் ராமசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிச்சாவரம் சுற்றுலா தலத்திற்கு வெளிநாட்டு பயணிகளின் வரத்து சற்று குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சிமன்ற தலைவர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், கலையரசன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன், தாசில்தார் ஹரிதாஸ், மாவட்ட சுற்றுலாத்துறை மேலாளர் முத்துசாமி, மேலாளர் தினேஷ் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
சிதம்பரம்
முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலாத்துறை அலுவலக வளாகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள சுற்றுலா பயணிகளுக்கான கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கட்டிட பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான கே.ஆர். செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ, மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, கிள்ளை பேரூர் செயலாளர் ரவிந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.