ஆற்றில் கழிவுநீர் கால்வாய் மண்ணை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
கந்திலி அருகே நரவந்தம்பட்டி உள்ள துலா ஆற்றில் 50 லாரிகளில் கழிவுநீர் கால்வாய் மண்ணை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி அருகே நரவந்தம்பட்டி உள்ள துலா ஆற்றில் 50 லாரிகளில் கழிவுநீர் கால்வாய் மண்ணை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
50 லாரிகளில் கழிவுநீர் மண்
கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சி சொக்கனாம்பட்டி அருகே துலா ஆறு பாய்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறு பாம்பாற்றில் கலந்து ஊத்தங்கரை வழியாக தென்பெண்ணையாற்றில் கலந்து சாத்தனூர் அணைக்கு செல்கிறது.
இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 50 லாரிகளில் கால்வாய் கழிவு மண்ணை எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். இது பற்றி அறிந்த அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கொதிப்படைந்து நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்த்தபோது கழிவுநீர் மண் கொட்டியதன் காரணமாக ஆறு மாசடைந்து தண்ணீர் நிறம் மாறியிருந்தது.
சாலைமறியல்
இதனையடுத்து கழிவுநீர் மண்ணை கொட்டிய நபர்களை கைது செய்யக்கோரி காக்கங்கரைக்கு செல்லும் வழியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆற்றில் கழிவுநீர் மண் கொட்டப்பட்டிருந்ததை பார்வையிட்டனர்.அப்போது அங்கே கூடியிருந்த பொதுமக்கள் கூறுகையில், ''இந்த ஆற்று நீர் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கழிவுநீர் மண்ணை கொட்டி சென்றுள்ளனர். இது ஆற்றில் கலந்து மாசடைந்து உள்ளது. ஆற்றின் கரையோரம் தனியார் நிலம் உள்ளது. அவர்கள் அந்தப் பகுதியில் செயற்கை மணல் தயாரிக்க ஆற்று மணலை எடுத்துள்ளதால் பல பகுதிகள் ஆழமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உடனடியாக கழிவு நீர் மண்ணை கொட்டிய நபரை கைது செய்ய வேண்டும். மலைபோல் குவிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் மண்ணை அகற்ற வேண்டும்'' என்றனர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அதன்பின் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பின் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் திருப்பத்தூரில் கலெக்டர் அமர்குஷ்வாஹாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.