வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காங்கயம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பினி வரதப்பம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி பிரேமா (வயது 30). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா தனது கணவரை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.
இதையடுத்து பிரேமாவுக்கும், நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பிரேமாவை சந்திக்க விஜய் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் பிரேமா மீது தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி பிரேமா இறந்தார். இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோவை சிறையில் இருக்கும் விஜய் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான கலெக்டர் உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் சிறையில் இருக்கும் விஜயிடம் வழங்கினார்.