நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்


நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்
x
தினத்தந்தி 13 Sept 2022 10:42 PM IST (Updated: 13 Sept 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நெற்பயிரை நாசமாக்கும் பன்றிகள்

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி குடிநெய்வேலி, நரியங்குடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 நாட்களில் இருந்து 90 நாட்கள் வளர்ந்த பயிராகவும், இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயராகிவிடும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பாப்பா கோவிலை சுற்றியுள்ள பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன. இந்த பன்றிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை தின்று சேதப்படுத்துக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கூட்டமாக மேய்கிறது

பாப்பா கோவில் ஊராட்சி பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அருகில் உள்ள கருவேல மர காட்டு பகுதியில், தஞ்சம் அடைந்துள்ள இந்த பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பல ஏக்கர் நெற்பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றிகள் பிடிக்கப்பட்டன. அவை முழுமையாக பிடிக்காமல், குறைந்த அளவிலேயே பிடிக்கப்பட்டதால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்த பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை மேய்கின்றன. இதனால் வயல்களுக்கு நடுவில் சிறிய குடில் அமைத்து இரவு, பகலாக கண்காணித்து வருகிறோம்.மேலும் பட்டாசு வெடித்தும் பன்றிகளை விரட்டி வருகிறோம். இருந்த போதிலும், பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

புயல், மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்ேபாது பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 மூட்டை நெல் அறுவடை செய்ய வேண்டிய விளைநிலத்தில், 30 மூட்டை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பித்து நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த சம்பா சாகுபடி பணிகளை பாதிப்பில்லாமல் தொடங்க முடியும் என்றனர்.


Next Story