பாதுகாப்பில்லாத நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
பாதுகாப்பில்லாத நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
போடிப்பட்டி
தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதுகாப்பில்லாத நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
தைப்பூசம்
தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதுதவிர கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து குழுவாக பழனி பாதயாத்திரை செல்கின்றனர்.
அந்தவகையில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை வழியாக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் நடந்து செல்கின்றனர். அதேநேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியிருப்பதால் பக்தர்கள் சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து போலீசார் அவ்வப்போது வந்து பக்தர்கள் இடையூறில்லாமல் நடந்து செல்லும் வகையில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பெரும்பாலான இடங்களில் பக்தர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலையே இருந்தது.
நடைபாதை
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடந்து செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ஒளிரும் பட்டைகள் பொருத்தும் ஏற்பாடு இல்லாததால் பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் மேடு பகுதியில் கோவையைச் சேர்ந்த பெண் பக்தர் பலியானது குறிப்பிடத்தக்கதாகும். எனவே பாத யாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரும் ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் பாதயாத்திரை பக்தர்களுக்கென நடைபாதை மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.