அன்னாசி பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை
பழனியில் அன்னாசி பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் அன்னாசி பழ சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. சீசன் காலத்தில் கேரளாவில் இருந்து அன்னாசி பழம் லாரிகளில் கொண்டு வரப்பட்டு பழனியில் வைத்து அதிகம் விற்கப்படுகிறது. தற்போது சீசன் என்பதால் பழனி பகுதியில் சாலையோரம் அன்னாசி பழம் குவித்து வைத்து விற்கப்பட்டு வருகிறது. வழக்கமாக அன்னாசி பழம் கிலோ ரூ.40 வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் சீசனால் வரத்து அதிகமாகி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் தரத்தை பொறுத்து 6 பழம் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. இதை பழனிக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து அன்னாசி வியாபாரி ஒருவர் கூறுகையில், புரட்டாசி மாத இறுதியில் தொடங்கும் அன்னாசி சீசன் தை மாதம் வரை இருக்கும். தற்போது சீசனால் வரத்து அதிகமாகி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே நேரடியாக லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என்றார்.