கொல்லிமலையில்அன்னாசி பழம் சீசன் தொடங்கியது
கொல்லிமலையில் அன்னாசி பழம் சீசன் தொடங்கியது. இந்த நிலையில் விலை உயர்வுக்காக மலைவாழ் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சேந்தமங்கலம்
அன்னாசி பழம் சீசன்
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் 14 ஊராட்சி பகுதிகள் காணப்படுகிறது. அதில் குறிப்பாக அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது. மற்ற பகுதிகளில் மற்ற பழங்கள் விளைந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட 2 ஊராட்சி பகுதிகளில் அன்னாசி பழத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால் அங்கு நாட்டு ரகம் மற்றும் கியூரக அன்னாசி ஆகியவை விளைந்து வருகிறது. அதில் குறிப்பாக நாட்டு ரக அன்னாசி பழங்களே அதிக அளவில் விளைந்து வருகிறது.
சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு அன்னாசி பழம் சீசன் நடந்து வருகிறது. அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்கள் வாகனங்கள் மூலமாக அங்குள்ள சோளக்காடு, தெம்பலம் ஆகிய சந்தை பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது.
விவசாயிகள் காத்திருப்பு
அந்த சந்தைகளில் இருந்து மூட்டை, மூட்டையாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால் இந்தாண்டு தற்போது தொடக்கத்தில் ரூ.250 முதல் ரூ.500 வரையில் விற்பனை ஆகி வருகிறது.
வருகிற வாரங்களில் விலையேற்றம் வந்தால் தான் அன்னாசி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் விலை உயா்வுக்காக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.