கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக முன்னோடி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடை தீவனப்பயிர்
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள 9 மாவட்டங்களில் வேலூர் உள்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக தற்போது தீவனப்பயிர் அறுவடை எந்திரம், தீவனப்பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் எந்திரம், டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டு தகுதியானோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த உபகரணங்களின் மொத்தவிலை ரூ.42 லட்சமாகும். இதில், பயனாளியின் பங்குத்தொகை ரூ.31½ லட்சம் போக, மீதமுள்ள ரூ.10½ லட்சத்தை அரசு மானியமாக வழங்குகிறது.
13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க...
இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால்பண்ணை உரிமையாளர்கள், சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்களை சேர்ந்தோர் பயனாளிகளாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின்படி ஓராண்டிற்கு 3,200 டன் புல் தயாரித்து விவசாயிகளுக்கு தேவையான பகுதிகளில் விற்பனை செய்ய வேண்டும்.
தீவனப்பற்றாக்குறையை பெரிதும் குறைக்க சாதகமாவதோடு தீவனப்பயிர் தொழில்முனைவோராக விவசாயிகளை உருவாக்குவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர விரும்பும் தகுதியான நபர்கள் அருகே உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்கள் பெற்று வருகிற 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.