அம்மாபேட்டை அருகே பரிதாபம்: கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவன் பலி


அம்மாபேட்டை அருகே பரிதாபம்:  கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவன் பலி
x
தினத்தந்தி 21 Sept 2022 1:00 AM IST (Updated: 21 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுவன் பலி

ஈரோடு

அம்மாபேட்டை அருகே கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

1-ம் வகுப்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (வயது 13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். இதில் அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் உள்ள பகுதியில் விளையாட சென்று விட்டான். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே அபினேஷ் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில்...

இதையடுத்து அங்கு சென்று தேடிப்பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் உள்ள தண்ணீரில் சிறுவன் மூழ்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

போலீசாரின் விசாரணையில், 'சிறுவன் அபினேஷ் விளையாடிக்கொண்டிருந்தபோது கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து இறந்ததை,' கண்டுபிடித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது, 'மாலை 5 மணி அளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததும், இறுதியாக 7 அடி ஆழம் உள்ள குழி அருகே உட்கார்ந்து கொண்டிருந்தபோது அதில் தவறி விழுந்து உள்ளான். மேலும் அந்தக்குழியில் 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் அதில் மூழ்கி அபினேஷ் இறந்ததும்,' தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story