கவுந்தப்பாடி அருகே பரிதாபம் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
2 வாலிபர்கள் பலி
கவுந்தப்பாடி அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
பாத்திர வியாபாரி
நம்பியூர் செட்டியம்பதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). பாத்திர வியாபாரி. நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் மெயின்ரோடு பகுதிைய சேர்ந்தவர் சங்கர்குமார். இவருடைய மகன் சங்கர் (23). கார்த்திக்கும், சங்கரும் நண்பர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இரவு கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியில் உள்ள கார்த்திக்கின் உறவினர் வீட்டுக்கு கார்த்திக் மற்றும் சங்கர் ஆகியோர் சென்றனர்.
பின்னர் அங்கு இரவு தங்கிவிட்டு நேற்று அதிகாலை மீண்டும் அவர்கள் 2 பேரும் நம்பியூருக்கு புறப்பட்டு சென்றனர். கவுந்தப்பாடியில் இருந்து நம்பியூருக்கு 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
2 பேர் சாவு
கவுந்தப்பாடியை அடுத்த கண்ணாடிப்புதூர் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக், சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.