கோவில்பட்டி அருகே பரிதாபம்:பழைய வீட்டை இடித்தபோதுமேற்கூரை விழுந்து தொழிலாளி பலி
கோவில்பட்டி அருகே பழைய வீட்டை இடித்தபோது மேற்கூரை விழுந்து தொழிலாளி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பழைய வீட்டை இடித்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது 38), கட்டிட தொழிலாளி.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ் நகரில் சுப்பையா என்பவர் புதிதாக வீடு கட்ட உள்ளார். இதற்காக அவரது பழைய வீட்டை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேற்கூரை இடிந்து பலி
நேற்று இந்த பணியில் மணிகண்டன் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென வீட்டின் காங்கிரீட் மேற்கூரை இடிந்து, மணிகண்டன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த மணிகண்டன் உடலை மீட்டனர்.
குடும்பம்
கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இறந்த மணிகண்டனுக்கு காத்தம்மாள் என்ற மனைவியும், பாரதி, காவியா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.