வெள்ளோடு அருகே பரிதாபம் வேன் மோதி பள்ளிக்கூட மாணவன் சாவு டிரைவர் கைது
பள்ளிக்கூட மாணவன் சாவு
வெள்ளோடு அருகே வேன் மோதி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான். இதில் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2-ம் வகுப்பு மாணவன்
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள எல்லக்காளிபாளையம் காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் விமலேஷ் (வயது 7). இவன் அனுமன்பள்ளியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு அரசு டவுன் பஸ்சில் வீடு திரும்பினான். அப்போது வெள்ளோடு - அனுமன்பள்ளி ரோட்டில் காரைவாய்க்கால் என்ற இடத்தில் பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் நடந்தான். அப்போது அங்குள்ள ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று விமலேஷ் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் விமலேஷ் படுகாயம் அடைந்தான். உடனடியாக அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விமலேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உத்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவரான கவுந்தப்பாடியை சேர்ந்த தருண்குமாரை கைது செய்தார்.