பள்ளிக்கு சென்றபோது பரிதாபம்: ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலி


பள்ளிக்கு சென்றபோது பரிதாபம்: ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலி
x

பள்ளிக்கு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் எல்.கே.ஜி. மாணவன் பலியானான். மேலும் 7 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் அதே ஊரை சேர்ந்த அந்தோணி மகன் ராஜி என்பவர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். அவர் நேற்று காலை பாளையங்கோட்டை அருகே உள்ள ஊத்துபாறையை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் (வயது5) உள்பட 8 மாணவ-மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதில் செல்வநவீன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த எல்.கே.ஜி. மாணவன் ஆவான்.

ஆட்டோ கவிழ்ந்து சாவு

நெல்லை அருகே அனவரதநல்லூர் இந்திராநகர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கதறி கூச்சலிட்டனர். சிறுவன் செல்வநவீன் ஆட்டோக்கு அடியில் சிக்கிக் கொண்டான். இதில் அவன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

ஆட்டோவில் இருந்த மற்ற 7 மாணவ-மாணவிகளில் முகிலா, நவீன்குமார் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

காரணம் என்ன?

விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் ராஜி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜியை பிடித்து கைது செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரனையில், டிரைவர் ராஜி ஆட்டோ ஓட்டி சென்றபோது செல்போனில் பேசியபடி சென்று உள்ளார். அப்போது அவரது செல்போன் தவறி கீழே விழுந்து உள்ளது. அதை பிடிக்க முயன்றபோது, ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரியவந்து உள்ளது.

பள்ளிக்கு அனுப்பிய முதல் நாளிலேயே சோகம்

உயிரிழந்த செல்வநவீனை அவனது பெற்றோர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனர். அவனை ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி நேற்று தங்களது மகனை ஆசை, ஆசையாக முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். ஆனால் ஆட்டோ விபத்தில் செல்வநவீன் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story