ஒரு லட்சம் பனை தொழிலாளர்களை நலவாரியத்தில் சேர்க்க திட்டம்


ஒரு லட்சம் பனை தொழிலாளர்களை நலவாரியத்தில் சேர்க்க திட்டம்
x

தமிழகத்தில் ஒருலட்சம் பனைமரத் தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழகத்தில் ஒருலட்சம் பனைமரத் தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தெரிவித்தார்.

பனைமர தொழிலாளர்கள்

திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் நேற்று பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடந்தது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா வரவேற்று பேசினார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன் கலந்து கொண்டு, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு பாராட்டு

பின்னர் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார். மேலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டே பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மாரிச்செல்வநாதன் (19), சாம்ராஜ் (18) ஆகிய 2 மாணவர்களை பாராட்டி கவுரவப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றது. பின்னர் கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக இந்த வாரியம் செயல்படவில்லை. தமிழகத்தில் உள்ள பனை மர தொழிலாளர்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒருலட்சம் உறுப்பினர்களை...

தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மாவட்டந்தோறும் இந்த முகாம்களை நடத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கவில்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கடந்த 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்களை அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.

இந்த வாரியத்தில் உறுப்பினராக உள்ள 60 வயதுக்கு வர்களுக்கு ஓய்வூதியம், குழந்தைகளின் படிப்பிற்காக 6-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. தற்போது 10 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். இந்த முகாம் மூலம் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

முகாமில், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆறுமுகம், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் கண்ணன், மாநில துணை பொது செயலாளர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநில தொழிலாளர் சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், சதீஷ், பாலாஜி, அந்தோணி ராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், பனைமர வாரிய உறுப்பினர்கள் பசுமை வளவன், ஆன்டோ பிரைட்டன், ஆசிரியர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் ஆய்வு

முகாமை முடித்து கொண்டு நேற்று மாலையில் தூத்துக்குடி சென்ற அவருக்கு கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி பனை பொருள் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story