தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மூலம் திட்டம் - கி.வீரமணி


தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மூலம் திட்டம் - கி.வீரமணி
x

தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு என்பதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், அதனை ஒரு சாக்காகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்றிட திட்டமிட்டு குறிவைத்துச் செயல்படுகின்றது. வீண் வம்புகளை வலிய இழுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது என்ற பழிபோட திட்டமிட்டு செயலாற்றுகின்றன.

தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர். பெரியார் மண் இது, மறவாதீர்.

அக்டோபர் 2-ந்தேதி காந்தி பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலமாம். அந்நாளில் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்திட, அனுமதியளிக்க ஐகோர்ட்டு கட்டளையிட்டு இருப்பது நியாயந்தானா?.

அந்த நாளில் ஊராட்சி, பஞ்சாயத்துகளில் ஊர் சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நாளல்லவா?. இதுபற்றி தமிழ்நாடு அரசும், ஏன் ஐகோர்ட்டும்கூட காந்தி பிறந்த நாள் என்பதை நினைவில்வைத்து, தங்கள் முடிவை மீண்டும் சீராய்வு செய்யவேண்டும்.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் துணை போகவேண்டாம். மதவெறி மாய்த்த - மனிதநேயம் என்றும் தழைக்கும் மண்ணாக தமிழ்நாட்டை பாதுகாப்பது, தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமை - கட்சி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story