வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்


வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்
x

பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது.

புதுக்கோட்டை

வங்கி சேவைகள்

மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது. இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

அதற்கேற்றாற்போல், வங்கிச் சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுக வேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டி உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

பணப்பரிமாற்றம் பாதிப்பு

மாட்டுத்தீவன மொத்த வியாபாரி ஆறுமுகம்:- வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கினால் மொத்த வியாபாரிகள், வணிகர்கள், பெரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சற்று பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வாரத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகளில் நேரடியாக பணப்பரிவர்த்தனை அதிகமாக மேற்கொள்ளப்படும். ஆர்டர்கள், கொள்முதலுக்கு பணப்பரிவர்த்தனைகள் சனிக்கிழமைகளில் அதிகம் நடைபெறும். இதனால் மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் வங்கிகளில் இயங்கி வருவது பயனுள்ளதாக உள்ளது. இதனையும் மாற்றி விடுமுறை அளித்தால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காசோலை உள்பட பணப்பரிமாற்றம் பாதிக்கப்படும்'' என்றார்.

காேசாலைகள் மாற்ற காலதாமதம்

அறந்தாங்கியை சேர்ந்த மணி:- வங்கிகள் தற்போது மாதத்தில் 2 சனிக்கிழமைகள் செயல்படாமல் உள்ளது. இந்த நாட்களில் வங்கியில் வரவு, செலவு இல்லாமல் பணம் எடுக்கவும், பணம் போடவும் முடியாமல் சிரமமாக உள்ளது. மேலும் காசோலைகளை மாற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறித்த நேரத்திற்கு பணம் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரமுடியாத நிலை உள்ளது. 2 தினங்களுக்கு விடுமுறை விடுவதே சிரமமாக உள்ளது. இதில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி செயல்படும் என்றால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களுக்கு வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டால் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை பொதுமக்கள் எப்படி எடுப்பார்கள்.

வெள்ளிக்கிழமை இரவே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்காது. மற்ற 2 தினங்களுக்கு பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை வந்து விடும். இதனால் பொதுமக்கள் நலன் கருதி வங்கிகளை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும் என்றார்.

சிறு வணிகர்களுக்கு

வங்கி சேைவ முக்கியம்

கீரனூர் மெடிக்கல் உரிமையாளர் கார்த்திகேயன்:- வங்கி சேவைகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடந்தாலும் வங்கியின் செக் ட்ராப்ட் நடைமுறையில் உள்ளது. பணப்பட்டுவாடாவுக்கு காசோலைகள் கொடுக்கப்படுகிறது. இதனை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பணம் செலுத்துவதற்கும் அனுப்புவதற்கும் ஏ.டி.எம். பயன்பாட்டில் இருந்தாலும், அதனை மாதத்தில் 3 முறை தான் பயன்படுத்த முடியும். அதுவும் ரூ.30 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே சிறு வணிகர்களுக்கு வங்கி சேவை முக்கியமாக பயன்படுகிறது. எனவே சனிக்கிழமையிலும் வங்கி செயல்படலாம் என்றார்.

ஊழியர்களின் மனஅழுத்தம் குறையும்

பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் பிரியா மகேந்திரன்:- ''வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் ஆன்லைனிலும் தற்போது வந்துவிட்டது. ஆன்லைனில் பணம் செலுத்துதல், பணப்பரிமாற்றம் உள்ளன. இதேபோல ஏ.டி.எம். மையங்களிலும் பணம் செலுத்துதல், பணம் எடுத்தலுக்கான வசதிகள் ஏராளமாக உள்ளது. பரிணாம வளர்ச்சிக்கேற்ப டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக நடவடிக்கைகளை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த சேவைகள் இன்னும் முழுமையாக மக்களை சென்றடைய சில ஆண்டுகள் ஆகலாம். தற்போதைக்கு ஆன்லைன் பரிவர்த்தனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இருப்பினும் வங்கிகளிலும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது வரவேற்கத்தக்க கூடியது தான். வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவோடு சேவை அளிக்க வேண்டுமானால் ஊழியர்கள் மனநிறைவோடு பணியாற்ற வேண்டும். ஊழியர்களுக்கு குடும்பமும் முக்கியமாகும். ஊழியரும், குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் பணியாற்றி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும்.

தற்போது வங்கி ஊழியர்களுக்கு பணி தொடர்பாக மனஅழுத்தம் அதிகம் காணப்படுகிறது. காலையில் 9.30 மணிக்கு பணிக்கு வந்தால் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்ப செல்ல நேரிடுகிறது. அதன்பின் குடும்பத்தை கவனித்தல், குழந்தைகளை கவனித்தல் என்பது பலருக்கும் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை உள்பட சேவைகள் அளிக்கப்படுகிறது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாலை 5 மணி வரை பணம் செலுத்தலாம். இந்த பணிகள் முடிந்த பின்பு தான் வங்கிகளின் பணி தொடங்குகிறது. அதன்பின் பணப்பரிவர்த்தனை சரிபார்த்தல், கணக்குகளை கையாளுல், கணினியில் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் உள்ளது. இதில் ஊழியர்கள் தங்களது பணியை செவ்வனே நிறைவேற்றிவிட்டு வீட்டிற்கு திரும்புவது உண்டு. இவ்வாறு வாரம் முழுவதும் உழைக்கும் வங்கி ஊழியர்களுக்கு வார இறுதி நாட்களில் விடுமுறை அவசியமாக உள்ளது. தற்போது மாதத்தில் 2 சனிக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்படுகிறது. இந்த சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுவதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைவதோடு, மனஅழுத்தம் குறையும். வங்கிகளில் அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புதல், ஏ.டி.எம். கோளாறு உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை நாட்களிலும் கூட வங்கி ஊழியர்கள் வந்து பணியாற்றுகின்றனர். பணப்பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர் சேவை மையம் என தனியாகவும் இயங்குகிறது. இதனையும் பயன்படுத்தலாம் என்றார்.

வங்கிகள் செயல்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்

விராலிமலையை சேர்ந்த பழனியப்பன்:- வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பு நிச்சயமாக வணிகம் தொடர்பான வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விராலிமலையை பொறுத்தவரையில் பெரும்பாலான நேரங்களில் ஏ.டி.எம். எந்திரங்கள் வேலை செய்யாமல் உள்ளது. எனவே பணம் எடுப்பதிலும், வங்கி கணக்கில் பணம் செலுத்துவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. வங்கி மூலமாக செயல்படும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட அளவிலான பண பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலை உள்ளதால் அதிலும் முழுமையான பலன் வணிகர்களுக்கு கிடைக்காமல் போகிறது. எனவே வார இறுதி நாட்களிலும் வங்கிகள் செயல்பட்டால் வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


Next Story