234 தொகுதிகளிலும் 'விஜய் பயிலகம்' தொடங்க திட்டம்: முதல் பாடசாலை சென்னையில் நாளை திறப்பு


234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்க திட்டம்: முதல் பாடசாலை சென்னையில் நாளை திறப்பு
x

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் சென்னையில் முதல் விஜய் பயிலகம் நாளை (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது.

சென்னை,

சினிமாவில் முத்திரை பதித்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தனது ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியல் கட்சிகள் போல நிர்வாகிகள் நியமித்த நாள் முதலே விஜய் அரசியலுக்கு வருவாரோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை மெய்ப்பிக்கும்படியே நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற செயல்பாடுகளில் தனது மக்கள் இயக்கத்தினரை எழுச்சியுடன் ஈடுபட வைத்து வருகிறார், விஜய். சமீபத்தில் கூட 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். இதனாலேயே அவரது அரசியல் வருகைக்கு வெகு சீக்கிரம் விடை கிடைத்துவிடுமோ என அரசியல் நோக்கர்கள் கருதினர்.

விஜய் பயிலகம்

இந்தநிலையில் காமராஜர் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஜய் அறிவுறுத்தியபடி, ஜூலை 15-ந்தேதி (நாளை) பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். அந்த நாளில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்ய வேண்டும். மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கற்றல் திறனை மேம்படுத்த...

அதன்படி சென்னை முத்தமிழ்நகரில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு, முதல் விஜய் பயிலகத்தை புஸ்சி ஆனந்த் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்து தொகுதிகளிலும் இந்த பயிலகம் திறக்கப்பட உள்ளது.

தேர்வுகளில் தோல்வி அடையும், குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பாடசாலைகள் செயல்படும்.


Related Tags :
Next Story