கோடை விழாவையொட்டிமுதல்முறையாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா-13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டம்


கோடை விழாவையொட்டிமுதல்முறையாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா-13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டம்
x

கோடை விழாவையொட்டி முதல் முறையாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

கோடை விழாவையொட்டி முதல் முறையாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தொடக்க விழா

ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

ஹெலிகாப்டர் சுற்றுலா

இதன்படி இந்த மாதம் 6 மற்றும் 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான், 11-ந் தேதி படகு போட்டி, 12,13,14-ந் தேதி கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி, 13,14,15-ந் தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா, 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, 21 22-ந் தேதிகளில் குன்னூரில் தேயிலை சுற்றுலா, 25 முதல் 31-ந்தேதி வரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கோடை விழா, 27 28-ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி, 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது.இதில் சிறப்பம்சமாக 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.

1000 அடி உயரம்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஊட்டி 200-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை கவரவும் இந்தாண்டு கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 200 ஆண்டு காலம் வரலாற்றில் முதல் முறையாக இது தொடங்கப்பட உள்ளது. இதன் பின்னர் படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறுவனம் மூலம் ஊட்டி தீட்டுக்கள் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒருமுறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம். அங்கிருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம், சுமார் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.விமான நிறுவன உத்தரவின் படி சுமார் 1000 அடி உயரம் வரை பறந்து ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கலாம். ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெறலாம். அதே சமயத்தில் நேரில் தீட்டுக்கள் மைதானத்திற்கு வந்தும் அனுமதி வாங்கலாம். ஊட்டி கால நிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story