தோட்ட காவலாளி அடித்து கொலை
உத்தமபாளையம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தகராறில் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
தோட்ட காவலாளி
தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தை திடல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனியார் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடன், கம்பம் பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த செல்வம் (45) என்பவரும் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் மணிகண்டனுக்கும், செல்வத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், செல்வத்தை அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
அடித்து கொலை
இதில் செல்வத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மணிகண்டன் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமல் தோட்டத்துக்கு வந்து செல்வம் தங்கினார். பின்னர் மணிகண்டனும் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை, செல்வம் இறந்து கிடந்தார். இதை பார்த்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு சக தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், மணிகண்டன், செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.