தரிசு நிலங்களில் மாங்கன்றுகள் நடும் பணி


தரிசு நிலங்களில் மாங்கன்றுகள் நடும் பணி
x

கீரைசாத்து, இளையநல்லூர், விண்ணம்பள்ளி பகுதிகளில் உள்ள தரிசுநிலங்களில் மாங்கன்றுகள் நடும் பணியை தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன் ஆய்வு செய்தார்.

வேலூர்

மாங்கன்றுகள் நடும்பணி

வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக உள்ள நிலங்களை தேர்வு செய்து குழுக்களாக பதிவுசெய்து அவற்றில் குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக மாற்றுவது மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கு நீர்ஆதாரங்களை உருவாக்கி தருவது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சோலார் மின்சார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

அதன்படி காட்பாடி ஒன்றியம் கீரைசாத்து, இளையநல்லூர், விண்ணம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தலா 6 ஏக்கர் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தப்பட்டு தலா 370 மாங்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

துணை இயக்குனர் ஆய்வு

இந்த பணிகளை வேலூர் தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன் நேரில் பார்வையிட்டு, மாங்கன்றுகள் குறிப்பிட்ட இடைவெளியில் எவ்வளவு நடப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது காட்பாடி தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஜெகன், சிவக்குமாரன் (நடவுப்பொருட்கள்), உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சிவக்குமார், தேசிங்குராஜன், அருணாச்சலம், பார்த்திபன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களை மானியத்தில் வழங்குவது, பயிருக்கு ஏற்ப சொட்டுநீர் பாசனம் அமைத்து தருவது, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, உற்பத்தியை பெருக்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வேலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 247 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்தாண்டு 43 ஊராட்சிகள், இந்த ஆண்டு 57 ஊராட்சிகள் என்று மொத்தம் 100 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செய்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story