சோலை மரக்கன்றுகள் நடவு
குன்னூர், கோத்தகிரியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
குன்னூர்,
குன்னூர் நகராட்சியில் உழவர் சந்தை பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு உணவு, காய்கறி போன்ற மக்கும் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகர் நல அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை 50 சோலை மரக்கன்றுகளை நடவு செய்தனர். மேலும் குன்னூர் நகரை குப்பையில்லா நகரமாக மாற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோத்தகிரி பேரூராட்சி சார்பில், ஈளாடா தடுப்பணையில் சுகாதார பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சதாசிவம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடுப்பணை பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் 200 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.