வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் செம்மரம், தேக்கு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம்-வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
பாப்பிரெட்டிப்பட்டி:
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரக்கன்றுகள்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு 20 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இதில் தேக்கு, செம்மரம், மலைவேம்பு, மகாகனி, ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட தயார் நிலையில் உள்ளன. வரப்பு நடவு முறையில் ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம், அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும்.
விவசாயிகள் பயன் பெறலாம்
விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரங்கள் வீதம் அதிகபட்சமாக, 5 ஏக்கருக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகளை நவம்பர், டிசம்பர் மாத பருவ மழையை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம்.
இதற்காக விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் அ.பள்ளிப்பட்டியில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.