செடி, கொடிகள் முளைத்து வீணாகும் பழைய கலெக்டர் அலுவலகம்
செடி, கொடிகள் முளைத்து வீணாகும் பழைய கலெக்டர் அலுவலகத்தை சீரமைத்து புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடலூர்... தென்பெண்ணையாறும், கெடிலமும் கடலில் சங்கமிக்கும் அற்புத இடமாக உள்ளது. கடலூருக்கு கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கடந்த 1683-ம் ஆண்டு புனித டேவிட் கோட்டை கட்டப்பட்டது. ஆங்கில பேரரசிற்கு அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவ் இங்கு தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.
கி.பி.1757 வரை ராபர்ட் கிளைவ் கடலூரில் தங்கி இருந்தார். கார்டன் ஹவுஸ் என்ற கட்டிடத்தில் தங்கி இருந்தார். அது தான் தற்போது உள்ள கலெக்டரின் முகாம் அலுவலகமாக உள்ளது. தற்போது இந்த கட்டிடம் புனரமைக்கப்பட்டு வருகிறது.
பழைய கலெக்டர் அலுவலகம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுள் ஒன்று தான் பழைய கலெக்டர் அலுவலகம். இந்த கட்டிடம் மஞ்சக்குப்பம் மைதானம் எதிரே நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. கடந்த 1897-ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகும். இந்த கலெக்டர் அலுவலகத்தில் 1801-ம் ஆண்டு கேப்டன் கிரஹாம், ஹாரி டைலர் முதல் 2015-ம் ஆண்டு சுரேஷ்குமார் வரை 130 கலெக்டர்கள் பணியாற்றி உள்ளனர். பழமைவாய்ந்த இந்த கலெக்டர் அலுவலகத்தை புதுப்பிக்காமல், புதிய கலெக்டர் அலுவலகத்தை தென்பெண்ணையாற்றின் கரையோரம் கொண்டு சென்றனர். அங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதனால் பழைய கலெக்டர் அலுவலகம் பழமைமாறி, கட்டிடங்களில் செடி, கொடிகள் முளைத்து வீணாகி வருகிறது. மரங்களும் வளர்ந்து கட்டிடம் விரிசல் ஏற்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது எவ்வித ஆர்ப்பரிப்பும் இன்றி அமைதியாக உள்ளது. பல துறைகள் இயங்கி வந்த இந்த கட்டிடத்தில் தற்போது அரசு அருங்காட்சியகம், மீன்வளத்துறை, வனத்துறை, கருவூலம் ஆகிய 4 அலுவலகங்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது.
புனரமைக்க வேண்டும்
மற்ற கட்டிடங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு கிடக்கிறது. வவ்வால்களின் புகலிடமாக பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளது. எங்கும் துர்நாற்றம் வீசியபடி உள்ளது. ஆங்காங்கே குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் குப்பைகளை அள்ளி உள்ளனர். மற்ற இடங்கள் குப்பை மேடாக உள்ளது. அலுவலகங்கள் இருக்கும் இடம் மட்டும் குப்பைகள் இல்லாமல் சுகாதாரமாக உள்ளதை பார்க்க முடிகிறது. மேற்கு பகுதி வாசல் மூடப்பட்டு உள்ளது. அதில் குப்பைகள் குவிந்தும், செடி, கொடி, மரங்கள் முளைத்தும் வீணாகி வருகிறது.
இதை பார்த்த பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் பழைய கலெக்டர் அலுவலகத்தை பழமை மாறாமல் புனரமைத்து, வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை இங்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
புராதன சின்னமாக...
கடந்த 2018-ம் ஆண்டும் இதே கோரிக்கையை முன்னெடுத்தனர். அப்போது, கடலூர் சப்- கலெக்டராக இருந்த ஜானிடாம் வர்கீஸ், பழைய கலெக்டர் அலுவலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி சென்னையில் இருந்து கட்டிட வல்லுனர்கள் வந்து ஆராய்ச்சி செய்து விட்டு சென்றனர். இதனால் எப்படியும் பழைய கலெக்டர் அலுவலகம் புதுப்பிக்கப்படும் என்று நினைத்த மக்களுக்கு, அவர் பணி மாறுதல் ஆகி சென்றவுடன் கானல் நீராகி விட்டது.
இதேபோல் 2021-ம் ஆண்டு கலெக்டராக இருந்த பாலசுப்பிரமணியமும், இந்த பழைய கலெக்டர் அலுவலகத்தை புதுப்பித்து புராதன சின்னமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், அதற்கான எவ்வித பணிகளும் தற்போது வரை நடக்கவில்லை. இதனால் மாநகர மக்களின் கோரிக்கை இது வரை நிறைவேறாமல் உள்ளது. ஆகவே பழைய கலெக்டர் அலுவலகத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, புராதன சின்னமாக பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
விரைந்து செயல்படுத்த வேண்டும்
இது பற்றி கடலூர் வில்வநகரை சேர்ந்த பழனிவேல் கூறுகையில், ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் நூற்றாண்டுகளை தாண்டி கம்பீரத்துடன் உள்ளது. இந்த கட்டிடத்தை புனரமைப்பு செய்ய வேண்டியது அரசின் கடமை. தற்போது அரசு, புராதன சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் பழைய கலெக்டர் அலுவலகத்தையும் புனரமைத்து, புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கட்டிடத்தை புதுப்பிக்க பொதுப்பணித்துறை கட்டிட பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தார்கள்.அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆகவே இந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.
கட்டிடம் வீணாகி வருகிறது
கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த கருப்பையன் கூறுகையில், ஆங்கிலேயர்கள் புனித டேவிட் கோட்டையை தலைநகரமாக வைத்து ஆட்சி செய்தார்கள். ராபர் கிளைவ் ஆட்சிக்காலத்தில் இந்த கட்டிடம் கட்டி தற்போதும் உள்ளது. ஆனால் இதை சீரமைக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் பெரிய மரங்களும் வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. பழைய கலெக்டர் அலுவலகத்தில் 4 துறைகள் மட்டும் உள்ளது. இதனால் மற்ற கட்டிடங்கள் அனைத்தும் பூட்டி கிடக்கிறது. சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பும் உள்ளது. இந்த கட்டிடத்தில் மற்ற அலுவலகங்கள் வருவதை விட, இதை சீரமைத்து புராதன சின்னமாக மாற்றி, பொதுமக்கள் பார்வையிட மட்டும் அனுமதிக்கலாம் என்றார்.