நிலப்போர்வை அமைக்க மானியம்
நிலப்போர்வை அமைக்க மானியம்
போடிப்பட்டி,
மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு நிலப்போர்வை அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படவுள்ளது.
நீண்ட காலப் பயிர்கள்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலப்போர்வை அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம். தக்காளி, மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களுக்கு நிலப்போர்வை முறை நல்ல பலன் தருகிறது.
இதுதவிர நீண்ட காலப் பயிர்களான வாழை, பப்பாளி, மா, கொய்யா சாகுபடியில் நிலப்போர்வை அமைத்து சிறந்த பலன் பெற முடியும். காய்கறிப் பயிர்களுக்கு ஒரு முறை நிலப்போர்வை அமைத்தால் 3 அல்லது 4 சாகுபடி வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.பயிர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ள களைகளைக் கட்டுப்படுத்தும் எளிய யுக்தியாக நிலப்போர்வை உள்ளது.
ஒளிச்சேர்க்கை
இரவு நேரம் மற்றும் குளிர் காலத்திலும் மண்ணில் சீரான வெப்பத்தை நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும் முளைவிடும் தன்மையை வேகப்படுத்துவதற்கும் உதவுகிறது.நிலப்போர்வை அமைக்கப்பட்ட நிலங்களில் நுண்ணிய தட்ப வெப்பநிலை உருவாவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கிறது.
நிலப்போர்வை அமைப்பதால் நீர் நேரடியாக ஆவியாவது தடுக்கப்படுவதால் மண் ஈரம் பாதுகாக்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டாரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் காய்கறிப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கான நிலப்போர்வைகள் வழங்கப்படவுள்ளன.இதில் ஒரு ஏக்கருக்கு ரூ. 6400 வீதம் 25 ஏக்கருக்கு ரூ 1 லட்சத்து 60 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது. இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் நடப்பு ஆண்டில் கலைஞரின் அணைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மைவாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.