பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மூவலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை ஒன்றியம் மூவலூர் ஊராட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு ஒன்றிய ஆணையர் அன்பரசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியம்மாள், துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஊர்வலம் மூவலூர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று, மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது. இதில் கலந்து ெகாண்டவர்ள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குவோம் என்று முழக்கமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோதிஆடலரசன், சாந்திசேகர், பாண்டியன் மற்றும் ஊராட்சி பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல வள்ளாலகரம் ஊராட்சியில் நடந்த ஊர்வலத்துக்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதாராபர்ட் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.