கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்


கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்
x

திருவாரூர் கமலாலய குளக்கரையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூர்


திருவாரூர் கமலாலய குளக்கரையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமலாலய குளம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது கமலாலய குளம். குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் உள்ளது. 5 வேலி பரப்பில் அமைந்துள்ள பிரமாண்ட குளம் திருவாரூர் நகரை அழகுப்படுத்தி வருகிறது. 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ள கமலாலய குளம் தோஷம் நீக்கும் புண்ணிய தீர்த்தமாக திகழ்கிறது.இந்த பெருமைமிக்க குளம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் வடகரை பகுதி இடிந்து விழுந்தது.இதைத்தொடர்ந்து மேல்கரை பகுதியும் இடிந்தது. இதனால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு கருதி கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வல்லுனர் குழு

கோவிலுக்கு வரும் பக்தர்கள், வர்த்தகர்கள் நலன் கருதி திருவாரூர்- மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் டவுன் பஸ் மட்டுமே கமலாலயம் குளம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி பெய்த கனமழையால் திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தின் தென்கரை தடுப்பு சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. இதனால் தென்கரையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் வல்லுனர் குழு கமலாலய குளத்தின் கரையினை ஆய்வு செய்து, குளத்தின் படித்துறை உள்ள கிழக்கு கரையை தவிர அனைத்து கரைகளின் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

எச்சரிக்கை

இதைத்தொடா்ந்து தென்கரையில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கரையின் பாதுகாப்பு கருதி இதுவரை அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் இயக்கப்படாமல் உள்ளது. மேலும் தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நகர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக செல்வதற்கான கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக செல்லாமல் இருக்க துர்க்காலயா ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் எச்சரிக்கை பலகை, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள்

இதேபோல் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக செல்லாமல் தடுக்க வடக்கு வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக நாள்தோறும் சென்று வருகிறது.இதனால் குளத்தின் கரையின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.எனவே கமலாலய குளத்தின் கரைகளில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லாமல் இருக்க உயர்மட்ட தடுப்பு அமைத்து கரைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story