இடித்து அகற்றப்படாமல் உள்ள பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்
திருக்காட்டுப்பள்ளியில் இடித்து அகற்றப்படாமல் உள்ள பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளியில் இடித்து அகற்றப்படாமல் உள்ள பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி கட்டிடம்
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள், கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களை, பருவ மழைக்கு முன்னர் இடித்து அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலும் இதன்படி ஆபத்தான நிலையில் இருந்த பல்வேறு பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு இடிக்கப்பட்டன. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் நிலையிலும் பூதலூர் ஒன்றியத்தில் கோவிலடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடித்து அகற்றப்பட வேண்டிய பள்ளி கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்படாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடம்
கூரையில் உள்ள ஓடுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. அதன் மரச்சட்டங்கள் மற்றும் சுவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. அரைகுறையாக விடப்பட்டுள்ள கோவிலடி தொடக்கப் பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடித்து எப்போது அகற்றுவார்கள் என்பது தெரியாத நிலையில் இந்த கல்வி ஆண்டும் தொடங்கி பள்ளி புதிய கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
பழுதடைந்த கால்நடை ஆஸ்பத்திரி
இதைப்போல திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு எதிரில் பழுதான கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் ஒன்று எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது இந்த கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது இந்த கட்டிடம் முழுமையாக அகற்றப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கட்டிடம் இன்னும் அகற்றப்படாமல் ஆபத்தான நிலையிலேயே கட்டிடம் விட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த திருக்காட்டுப்பள்ளி கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.